Tuesday, 17 July, 2012

அதிர்ச்சியளிக்கும் பெண் சிசுக் கொலை


இவள் பாரதி


நேஹா அப்ரின்

கடந்த இரண்டு மாதத்திற்கு முன் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். நாட்டையே அதிரவைத்த பெயரும் கூட.

பெண்ணாகப் பிறந்த காரணத்தால் தனது தந்தையால் சிகரெட்டால் சுட்டும், கடித்தும் கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தை. பெங்களூரு மருத்துவமனையில் ஒருவார காலப் போராட்டத்திற்குப் பின் மரணத்தைத் தழுவிய மூன்று மாத குழந்தை.

கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஃபரூக். இவர் ரேஷ்மா பானு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  உமர் ஒரு பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி வரதட்சணைக் கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியவர், ’பெண் குழந்தை பிறந்தால் உன் தாய் வீட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வாங்கி வரவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு ரேஷ்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நேஹா அப்ரின் என பெயரிட்டனர். குழந்தை பிறந்ததிலிருந்தே வெறுப்பைக் காட்டி வந்த உமர் ஆண் குழந்தையை ஏன் பெறவில்லை என்று மனைவியையும் துன்புறுத்தியிருக்கிறார்.

குழந்தையின் உடம்பில் சிகரெட்டால் சூடு வைப்பது, தொட்டிலில் இருக்கும் குழந்தையை ஆட்டிவிடும் சாக்கில் சுவற்றில் மோதவிடுவது, அடிப்பது, கடிப்பது என சித்ரவதை செய்திருக்கிறார் உமர். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி குடித்துவிட்டு வந்து குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தை உடல்நிலை மோசமடைந்து வலிப்பு நோயும் வந்து இறந்துவிட்டது. இதற்கிடையே குழந்தையின் தந்தை உமர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம். பெண் குழந்தையின் மீது தீராத வெறுப்புடன் உமர் நடந்து கொண்டதைப் போல் இல்லாவிடினும் வேறு வகைகளில் பல்வேறு இடங்களில் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்று நடக்காது என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி பெண் குழந்தைகளின் பிறப்பு குறித்த தகவல்கள் கேட்கப்பட்டன. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். அதில் 2001 ஆம் ஆண்டு 390 ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 895க்கு குறைவாகவும், 2008 ஆம் ஆண்டு 447 ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 900க்கு குறைவாகவும் இருக்கிறது. இதன் மூலம் கருவிலேயே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்படுவது தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாடு பெண்சிசுக் கொலைக்கு எதிரான பிரசார மையக்குழு உறுப்பினர் எம்.ஜீவா, ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி ஆகியோர் கூறுகையில், ‘அதி நவீன மருத்துவ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆண் குழந்தையை மட்டுமே கருப்பையில் பொருத்துகின்றனர். இதனால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது‘ என்றனர்.

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனக் கண்டறிவது குற்றம் என்றாலும் அந்த நடைமுறை இன்று வேறுவிதமாக உள்ளது. கருவின் குறைபாடு பற்றி அறிவதற்காக செய்யப்படும் ஸ்கேனிங் போது, குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியப்படுகின்றன. மண்டே, பிரைடே, மிரிண்டா, பாண்டா, தம்ஸ் அப், தம்ஸ் டவுன் போன்ற சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், சில மையங்களில் தாளில் எழுதிக் கொடுப்பதையும் பெண் சிசுக் கொலைக்கு எதிரான  அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் ஆண் பெண் விகிதாசாரம் பெருமளவு குறையும் அபாயம் ஏற்படும். இதைத் தடுக்க தமிழகத்தில் உள்ள 4560 ஸ்கேனிங் மையங்கள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தொட்டில் குழந்தை திட்டத்தை சரியாக அமுல்படுத்த வேண்டும். சுகாதார நிலையங்களில் ’ஃபார்ம் எஃப்’ படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். ‘பிறக்கப் போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறியும் தொழில் நுட்பங்கள் சட்டம் - 2002’, ‘மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் - 1971’ ஆகிய சட்டங்களை தீவிரமாக அரசு அமல்படுத்த வேண்டும்.

’’சமீபத்தில் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்திருந்தது. நம்முடைய சமூக மதிப்பைக் குறைகாணும் வகையில் இருந்தது. ஆனால், நம்முடைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளை எந்தக் கண்ணோட்டத்தில், மதிப்பீட்டில் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். நம் நாட்டின் பல இடங்களில் கருவில் பெண் சிசுக் கொலை மற்றும் பெண் குழந்தை படுகொலை நடந்து கொண்டிருப்பது நமக்கு தேசிய அவமானம். ’’ என்று கூறியிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கமால் ஜீத் கூறுகையில், இன்றைய கால கட் டத்தில் பெண் குழந்தை பிறப்பு என்பது எதிர்காலத் திற்கான மோசமான முதலீடு என கருதுகின்றனர் என்கிறார்.

· கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் 20,000 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
· கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் அழிக்கப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம்.
· நமது நாட்டில் ஆண்டுதோறும் ஒரு கோடியே பத்து லட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. இதில் எண்பது லட்சம் பெண்சிசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் முத்துலெட்சுமியாகவோ, கிரண் பேடியாகவோ, அன்னி பெசண்டாகவோ, கல்பனா சாவ்லாகவோ, அஞ்சு பாபி ஜார்ஜாகவோ தலையெடுக்கும் முன் களையெடுக்கத் துவங்கும் பெண் சிசுக் கொலை புரிபவர்களை அதற்கு துணை நிற்பவர்களை சிறிதளவும் மன்னிக்காமல் தண்டிக்க வேண்டும்.

பெண் குழந்தை குடும்பத்தின் சுமையல்ல.. சமூகத்தின் மேன்மை என்பதை எப்போது உணர்வார்கள் இந்த கொலையாளிகள். மகாகவியின் கண்ணம்மாக்கள் ஆயிரமாயிரமாய் வளர வேண்டும்.


இவள் பாரதி

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?