Monday 16 July, 2012

11,500 ஆண்டுகள் பழைமையானதா பூம்புகார்?




இவள் பாரதி


புகார் கடலாராய்ச்சியில் புகார் மேல் புகார்


சமீப நாட்களாக கடல்கொண்ட பூம்புகார் பற்றிய ஆய்வு குறித்த மின்னஞ்சல் ஒன்று பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது. கிரகாம் ஹான்காக் என்ற ஆய்வாளர் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்து பூம்புகார் 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த மின்னஞ்சல், கிரஹாம் ஹான்காக்கின் ஆய்வின் அடிப்படையை ஏற்காமல் இன்னும் பூம்புகாரை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏன் பாடப்புத்தகங்களில் குறிப்பிட வேண்டும்?   இதுகுறித்து அக்கறை கொள்ளாமல் தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் என்ன செய்கிறது? கடலில் மூழ்கிய தமிழக நகரங்கள் பற்றிய ஆராய்ச்சி ஏன் தீவிரமடையவில்லை என்றும் அது சூடான சிந்தனைகளை முன்வைக்கிறது. கிரஹாம் ஹான்காக்கின் ஆய்வு குறித்து புதுச்சேரி, திராவிடப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்திவர்மன் தனது வலைத்தளத்தில் எழுதிய கட்டுரைதான் அப்படி மின்னஞ்சலாக அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. உண்மையில் பூம்புகார் கடலாய்வில் நடந்து வருவதென்ன?


நந்திவர்மன்

நந்திவர்மனைச் சந்தித்து கடல் கொண்ட பூம்புகாரின் கடலாய்வு குறித்தும் தொன்மை குறித்தும் கேட்டோம்.


"இணையதளத்தில் கூகுள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். இந்தியாவைச் சுற்றியிருக்கும் கடலோரப் பகுதி சில மைல் தூரம் வெளிர்நீல நிறத்திலும் அதைத்தாண்டிய பகுதிகள் கருநீல நிறத்திலும் இருக்கும். வெளிர்நீலப் பகுதிகள் ஆழம் குறைவானவை. அங்கே நிலம் மூழ்கியுள்ளது என்பதற்கு இன்று கூட பெரிய சான்று இருக்கிறது.
தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச், 8,9ல் கடலில் மூழ்கியவர்கள் இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள். எஸ்.ஆர்.ராவ் தலைமையில் வானகிரி பக்கத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்புடைய ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கூகுள் மேப்பில் வெளிர் நீலம்



 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட  வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். அது புழுதியும் சேறுமாக மூடப்பட்டிருந்தது.  பின்னர் நிதிப்பற்றாக்குறையால் அகழாய்வு தடைபட்டது.





 உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் ஹான்காக், தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஆர்.ராவ் அவர்களை 2001 பிப்ரவரியில் சந்தித்து சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார். அது குறித்து அவர்  தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் கிட்டத்தட்ட 19,000 ஆண்டுகளாக ICE AGE எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து வருகிறது. இதுவரை மூன்று முறை கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின. கடைசியாக 8,000 ஆண்டுகளுக்கு முன் பனி உருகி கடல் மட்டம் உயர்ந்தது என்கிறார் கிரஹாம். இவரது கருத்தை டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி கிளன் மில்னே, ‘கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் பார்க்கும்போது பூம்புகார்  9,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும்’ என்று உறுதி செய்தார்.



கிரஹாம் ஹான்காக்
 கிரஹாம், பூம்புகார் கடலில் மூழ்கி ஆய்வு செய்த அறிக்கையை பெங்களூரில் வெளியிட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், துவாரகை 7,500 ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொண்டவர்கள் பூம்புகார் 9,500 ஆண்டுகள் பழமையானது என்பதை ஏற்க மறுத்தனர். ஆனால், இவரது ஆய்வு, அண்டர் தி வேர்ல்டு என்ற தலைப்பில் அமெரிக்க சேனல்களில் ஒளிபரப்பானது.நம்மவர்கள் பலர் கரையில் இருந்துகொண்டே கடலைப் பற்றி ஆய்வு நோக்கில் எழுதிவிடுவார்கள். ஆனால், வெளிநாட்டவர்கள் கடலுக்குள் சென்று வந்துதான் கடலைப் பற்றியே எழுதுவார்கள்" என்கிறார் நந்திவர்மன்.


செல்வராஜ்
தேசியக் கடலாராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.ராவ் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, அவருக்கு உதவியாளராக அப்போது மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளராக இருந்தவர் செல்வராஜ். தமிழக அரசு கடலாய்வுக்காக ஒதுக்கிய பணத்தை செலவழிக்க வேண்டுமானால் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத்தோடு தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று கூறவே, முறையான பயிற்சி கொடுத்து செல்வராஜ் இந்த ஆராய்ச்சியில் நீருக்குள் மூழ்கி கடலாய்வு செய்திருக்கிறார். "1983 முதல் 1996 வரை நான்கு கட்டங்களாக ஆய்வு செய்தோம். திருமுல்லைவாயிலிலிருந்து தரங்கம்பாடி வரை எங்களது ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். தேசியக் கடலாராய்ச்சி நிறுவன விஞ்ஞானி வோரா தலைமையில் நடந்த முதல் கட்ட ஆய்வில் கடற்கரையோரம் ஐந்து கி.மீ. தூரம் வரை நடந்து போனோம். அதில் பல உறைகிணறுகளைக் கண்டறிந்தோம்.


இரண்டாம் மூன்றாம் கட்ட ஆய்வு, கடல் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது குளோபல் ப்ராஸசிங் சிஸ்டம் எனப்படும் ஜி.பி.எஸ். உட்பட ஐந்து வகையான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. Side scan sonar Fisher என்ற கருவியின் மூலம் கடலுக்கு அடியில் நிலப்பரப்பில் என்ன இருக்கிறது என்பதையும் (கட்டடம், மண் படிவங்கள், கப்பலின் சிதைந்த பகுதிகள் போன்றவை), Eco மூலம் அது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும், –Mini Ranger  மூலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்யமுடியும்.

கடைசியாக எஸ்.ஆர்.ராவ் தலைமையில் கடலுக்கு அடியில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த டைவர்ஸ் (கடலில் மூழ்குபவர்கள்) உடன் நானும் டைவிங் செய்தேன்.

இந்தக் கடலாய்வின்போது கடலுக்கு அடியில் 45 மீட்டர் நீளத்தில் 7 மீட்டர் தூரத்தில் மண்படிவங்களைக் கண்டறிந்தோம். ஒரு படிவத்தை ஆய்வு செய்தபோது, அது 2 மீட்டர் சுற்றளவுக்குப் புழுதிகளால் மூடப்பட்டிருந்தது. கரையிலிருந்து நாலரை கி.மீ. தூரத்தில் 67 அடி ஆழத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றளவும் இருக்கின்றன. செம்பூரான் கற்களை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட கட்டடங்கள் அப்போது கண்டறியப்பட்டன. எங்களது ஆய்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தமிழக கடலாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது" என்கிறார் தொல்லியல் நிபுணர் செல்வராஜ்.

ஒரிஸா பாலு
தமிழர்களின் தொன்மை குறித்தும், கடல் மீன் வளம் குறித்தும், பூம்புகார் மற்றும் குமரிக்கண்டம் போன்ற கடலில் மூழ்கிய நகரங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருபவர் ஒரிஸா பாலு. இவர், ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு மையம் என்ற அமைப்பை நிறுவி, கடல் சார்ந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சியையும் இதன் கீழ் ஒருங்கிணைத்து வருகிறார்.

ஒரிஸா பாலு கூறும்போது,  "தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் கார்பன் 14 ஆய்வு அடிப்படையில் கடலுக்கு அடியில் இருக்கும் பூம்புகார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்கின்றது. கிரஹாம் கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் 9,500 ஆண்டுகள் பழமையானது. கடலுக்குள் இருக்கும் கட்டடங்கள், உடைந்து போன கப்பல்களின் பகுதிகள் போன்ற இடங்களில்தான் அதிகமான மீன் வளங்கள் இருக்கின்றன. ஏனெனில் இடிபாடுகளுக்கிடையேதான் மீன் குஞ்சுகள் பெரிய மீன்களிடமிருந்து தப்பிப் பிழைக்க முடியும் என்பதுடன், அந்தப் படிவங்கள் மீது முட்டையிடவும், மீன் குஞ்சுகளைப் பாதுகாக்கவும் முடியும்.
பூம்புகாரிலும் இது போன்ற இடங்கள் இருக்கின்றன. கடல் பற்றி அதிகமாக மீனவர்களுக்குத்தான் தெரியும். அதனால், மீனவர்களின் துணையோடு எனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். இதுபோல பூம்புகாரிலும்  கடலில் மூழ்கும் குளியாளிகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு ஆவணப்படுத்த உள்ளோம்" என்றவர், சமீபத்தில் பூம்புகாரில் ஒரு கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

புலவர்.தியாகராசன்

இந்தக் கலந்தாய்வில் மீனவர்கள், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர் தியாகராசன், ‘பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள்’ எனும் அரிய ஆய்வு நூலை எழுதியவர். இவர் பூம்புகாரில் ஆய்வு மேற்கொள்ள வரும் தொல்பொருள்துறை, அகழாய்வுத் துறை அறிஞர்கள் அத்துணை பேருடனும் தொடர்பில் இருந்தவர். "இந்தக் கடலை அறுபது வருஷமா பாத்துட்டு இருக்கேன். நான் பார்த்த காலத்திலிருந்து கடல் இப்போ ரொம்ப உள்ளே வந்திருக்கு. அம்பது வருஷத்துக்கு முன்னாடி கடல் காலையில் உள்வாங்கி அந்தியில் வெளியே வரும். அப்போ அங்கே இருந்த கோயிலில் மக்கள் சாமி கும்பிட்டு வருவாங்க. காலையில் உள்வாங்கும்போது, மெதுவாகவும் வெளிவரும்போது வேகமாகவும் வரும். இப்போ இருக்கிற இந்தக் கண்ணகி சிலை மூன்று முறை இடம் மாறிடுச்சு" என்று கலந்தாய்வில் பேசினார்.
பேரா.தியாகராஜன்





மற்றொரு பேராசிரியர் தியாகராஜன், "பெரும்பாலும் வரலாறு சார்ந்த ஆய்வுகளை செய்வதும், மேற்கொள்ள தூண்டுவதும் தமிழ்த்துறை பேராசிரியர்களே. ஏனெனில் இலக்கியத்தில் இருக்கும் வரலாற்றின் உண்மையை தேடுபவர்கள் எங்களைப் போன்றவர்களே" என்றார்.





ஜெகன்
அடுத்து பேசிய மீனவர் ஜெகன், "கடலுக்குள் 65 இடங்கள்ல பார் (மீன் இனப்பெருக்கம் செய்யக் கூடிய இடிபாடுகள், தீவு போன்ற பகுதிகள்) இருக்கு. கிட்டத்தட்ட எல்லா இடங்கள்லயும் ஆழம் ரொம்பக் குறைவாகத்தான் இருக்கு. இந்த பார்கள்லதான் நாங்க போய் மீன் பிடிப்போம். ஒவ்வொரு பாருக்கும். காவிரி பார், பூம்புகார் பார்னு பேர் இருக்கும். எங்ககிட்ட இருக்கிற கருவி மூலம் ஒவ்வொரு பாரும் எவ்வளவு ஆழத்துல எவ்வளவு நீளத்துல எவ்வளவு பெரிசா இருக்குனு பாக்க முடியும். கிட்டத்தட்ட கடலில் 21 கி.மீ. வரை இந்த மாதிரி நிறைய பார்கள் இருக்கு" என்றார்.
இரா. கோமகன்

தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடற்புறப் பிரிவில் பணியாற்றிய பொறியாளர் இரா.கோமகன், "1998ம் ஆண்டு 45 மீட்டர் தூரத்தில் கடல் இருந்தது. 2009ல் 60 மீட்டர் கடல் ஊடுருவியது. தற்பொழுது மேலும் 10 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பால் கரை பாதிப்படைந்துள்ளது. மொத்தத்தில் வானகிரி கடற்கரை 70 மீட்டர் அரிப்புக்குள்ளாகியுள்ளது. தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின்படி பூம்புகார் 5 கிலோமீட்டர் கடல் கொண்ட பகுதி. ஒன்று மட்டும் உறுதியாகிறது, புகாரின் கரை விழுங்கும் கடலின் தாகம் இன்னும் தீர்ந்தபாடில்லை" என்கிறார்.

இந்த ஆய்வுக்காக முதலில் ஒதுக்கிய இரண்டரை கோடியில் 50 லட்சம் மட்டுமே ஆய்வுக்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. மிச்சம் என்ன ஆனதென்று தெரியவில்லை. தகுதியான கடலாராய்ச்சி நிபுணர்கள் இல்லாததும் இதுவரை நடந்து முடிந்திருக்கும் பூம்புகார் கடல் ஆய்வுகளைச் சரியான முறையில் அங்கீகரிக்காததும் இந்தப் பின்னடைவுக்குக் காரணங்கள் என்று கூறியவர்கள், கடலுக்கடியில் இருக்கும் நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இப்போது பூம்புகார்

ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். இப்போது குப்பைகள் குவியும் மண்மேடாக மாறியிருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகார் வார நாட்களில் குவியும் சுற்றுலா பயணிகளால் பிளாஸ்டிக்கால் நிரம்பி வழிவதும் கண்ணகி சிலையிருக்கும் கட்டடப் பகுதியில் சுற்றுலா வருபவர்கள் தங்களது பெயரினைப் பொறித்து விளையாடியிருப்பதும் ஒருபக்கம் வேதனையளிக்க, மறுபக்கம் பூம்புகாரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் வானகிரியில் அனல்மின் நிலையம் வர இருப்பது அந்தப் பகுதி மக்களை கவலையடைய வைத்திருக்கிறது. இதிலிருந்து வெளியேறும் கழிவுகளால் கடலில் இருக்கும் மீன் வளம் குறைந்துபோகும் அபாயமும் இருக்கிறது. 




நன்றி: புதிய தலைமுறை,  ஜூலை, 5 2012, (பக்கம் 54 - 56)
இவள் பாரதி

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?