Monday 16 July, 2012

தகவல் தராத தகவல் ஆணையத்திற்கு அபராதம்


இவள் பாரதி

தகவல் தரவேண்டிய தகவல் ஆணையமே, குறித்த காலத்திற்குள் கேட்ட தகவலைத் தராமல் காலதாமதம் செய்ததற்கு அபராதம் விதித்து நெத்தியடியாக தீர்ப்பளித்திருக்கிறது சென்னை (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றம். 

அரசு சார்ந்த எந்த தகவல்களையும் கேட்டு எழுத்து மூலம் பெறுவதற்கு ஒரு குடிமக்களுக்கு உரிமை உள்ளது. இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா, நமது வரிப்பணம் வீணாகிறதா, நம் நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நடக்கும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது உட்பட அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்தத் தகவல்களைப் பெற குறிப்பிட்ட 30 நாட்கள் என்ற காலக்கெடு இருக்கிறது. (உயிர் காக்கும் விஷயங்களில் 24 மணி நேரத்திற்குள் தகவல் தர வேண்டும்) இந்தக் காலகெடுவுக்குள் தகவல்கள் தரவேண்டும் என்றும், தாமதமானால் ஏன் தாமதமாகிறது என்பதற்கான சரியான காரணத்தையும் சொல்ல வேண்டும். சரியான தகவல்களைத் தர மறுப்பதும், தவறான தகவல்களைத் தருவதும், தகவல்களைத் தர காலம் தாழ்த்துவதும் நுகர்வோருக்கு செய்யும் அநீதியாகும். இந்த அநீதிக்கு எதிராகத்தான் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மாநில தகவல் ஆணையத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு எதிராக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

ரமேஷ், வழக்கறிஞர்
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி, மாநில தகவல் ஆணையத்திடம் சில கேள்விகளைக் கேட்டு தபால் அனுப்பியிருக்கிறார். அதில், ‘மனுதாரர்களுக்கு, தாமதமாக தகவல் தரும் பொது தகவல் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில தகவல் ஆணையத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சம்பளம் எவ்வளவு? என 19 தகவல்களைக் கேட்டுள்ளார். ஆனால் ஜூன் 23ம் தேதிதான் தகவல் தரப்பட்டிருக்கிறது. இதனால் சென்னை நுகர்வோர் மன்றத்தில் மாநில தகவல் ஆணையத்தின் மேல் புகார் அளித்தார். அதற்கு, ‘குறித்த நேரத்திற்குள் தகவல் தரப்படவில்லையெனில் ஆணையத்தில்தான் மேல் முறையீடு செய்ய வேண்டும், அவரை நுகர்வோராக கருதக் கூடாது’  என்று மாநில தகவல் தெரிவித்திருக்கிறது. 

நீதிபதி. ராமச்சந்திரன்
ஆனால், இதற்கு முன் இது போன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய நுகர்வோர் ஆணையம் ஆகியவை அளித்த தீர்ப்பினை முன்னுதாரணமாகக் கொண்டு, தகவல் கேட்பவரும் நுகர்வோரே என்ற அடிப்படையில், ’குறித்த நேரத்தில் தகவல் தராதது சேவைக் குறைபாடு’ என்று கூறி மாநில தகவல் ஆணையத்திற்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது சென்னை தெற்கு நுகர்வோர் குறைதீர் மன்றம். தாமதமான தகவலுக்காக மற்றும் சரியான தகவல் தராததற்காக தமிழகத்தில் முதன்முதலில் தகவல் அலுவலகம் மீது அபராதம் விதித்து உத்தரவிட்டவர் திருநெல்வேலியைச் சேர்ந்த நீதிபதி இராமச்சந்திரன். இந்த தீர்ப்பையும் முன்மாதிரியாகக் கொண்டே இப்போது மாநில தகவல் ஆணையத்திற்கெதிராக தீர்ப்பளித்திருக்கிறது சென்னை நுகர்வோர் மன்றம். மாநில தகவல் ஆணையத்தின் மீது அபராதம் விதித்திருப்பது இதுவே முதன்முறை. இனிமேலாவது தகவல் தர வேண்டிய அமைப்புகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படும் என நம்புவோம். 

பாக்ஸ்


ஐஸ்வர்யா
என் கேள்விக்கு என்ன பதில்?


பாடப்புத்தகம் படிக்கும் போது தோன்றிய ஒரு கேள்விக்கு பிரதமர் அலுவலகம் வரை பதில் கேட்டு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறாள் சிறுமி ஐஸ்வர்யா.


காந்தி எப்போது தேசத்தின் தந்தையானார்? இந்தக் கேள்விக்கு ஆசிரியர், பெற்றோர், உறவினரிடம் பதில் கிடைக்காத பத்து வயது சிறுமி, பிரதமரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பதில் கேட்டு கடிதம் எழுதுகிறார். திகைப்படைந்த பிரதமர் அலுவலகமோ அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப.. அங்கும் பதில் தெரியாததால் தேசிய தகவல் பதிவகத்திற்கு அனுப்பப்டுகிறது. அங்கும் பதில் தெரியவில்லை. (பதில்: காந்தியின் மனைவி இறந்த போது நேதாஜி வெளியிட்ட இரங்கல் செய்தியில் காந்தியை மகாத்மா என்று குறிப்பிட்டிருக்கிறார்) 

நன்றி: புதிய தலைமுறை,  ஜூன், 28, 2012, (பக்கம் 58 - 59)
இவள் பாரதி

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?