Monday, 16 July, 2012

சென்றார்கள்... வென்றார்கள்

இவள் பாரதி

எத்தனையோ தடைகளைத் தாண்டி வாழ்க்கைப் பயணத்தை தொடரும் மாற்றுத்திறனாளிகள், அவரவர்க்குரிய சில அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதுதான் பெரும் சோகம். அந்த வரிசையில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விடாப்பிடியாக போராடியதன் விளைவு.. இன்று அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைத்திருக்கிறது.

பொன்னையா

 பொன்னையா என்பவர் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளி. அவர் மாருதி 800 காரைக் கையால் ஓட்டிப் பழகுவதற்காக கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா என்பவரிடம் காரில் சில மாற்றம் செய்து வாங்கி ஓட்டிப் பழகுகிறார். நன்கு பழகிய பிறகு ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கிறார். ஆனால் உரிமம் தர மறுக்கிறார்கள். நிறைய இடங்களில் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. பின்னர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய, உடனடியாக ஓட்டுநர் பழகுநர் உரிமம் கொடுக்க வேண்டும். பின்னர் அவருக்கு டெஸ்ட் முடித்து லைசன்ஸ் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


பிரபுராஜதுரை
இந்த செய்தி பத்திரிக்கையில் வெளிவந்த மறுநாள் அரசாணை ஒன்று வெளியானது. அதில் டி.வி.எஸ் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து வெளிவரும் மாற்றுத் திறன் கொண்டோருக்காக வடிவமைக்கப்பட்ட மூன்றுசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர்க்கு உடனடியாக லைசன்ஸ் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது’ என்கிறார்கள் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிரபுராஜதுரையும், இராபர்ட் சந்திரகுமாரும்.

சரி, கையால் ஓட்டும் கார் உருவானது எப்படி?

லஜபதிராய்
’கேரளாவில் முஸ்தபா என்பவர் ஒரு விபத்தில் கால்களின் செயல்திறனை இழந்துவிடுகிறார். அவர் பிற்பாடு ஒரு கார் வாங்கி தனக்கு தகுந்த மாதிரி கைப்பகுதியில் சில மாற்றங்களை செய்து ஓட்டி வந்தார். இவருடைய நண்பர் ஒருவர் இந்தக் காரை விரும்ப அவருக்கு காரைக் கொடுத்துவிட்டு தனக்காக மறுபடியும் வேறொன்று செய்து கொண்டார். இப்படியே மாற்றுத்திறனாளிகள் கேட்டால் காரில் சில பாகங்களைப் பொருத்திக் கொடுத்து வருகிறார். நானும் அவரிடம் சென்று எனது காரை சில மாற்றங்கள் செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நான் வாங்கிய காரில் எந்தவித பாகங்களையும் மாற்றவில்லை. கால்பகுதியில் இருக்கும் ஆக்ஸிக்லேட்டருக்கும், ப்ரேக்குக்கும் ஒரு ஒயர் பொருத்தி கையினால் நான் ஓட்டும் அளவுக்கு மாற்றி வாங்கி வந்தேன். இதுவரை கடந்த ஏழு வருடங்களாக 50,000கி.மீட்டருக்கு மேல் வண்டி ஓட்டியிருக்கிறேன். எனது தேவைக்கு அடுத்தவரை எதிர்பார்த்து நிற்பது இயலாது என்பதை விட பிறருக்கு அவசர உதவி தேவைப்படும் போது உதவ முடிகிறது என்பது திருப்தியளிக்கிறது. ஆனால் இன்னும் எல்.எல்.ஆர். தான் வைத்திருக்கிறேன். நிரந்தர லைசன்ஸ் தரவில்லை.’ என்று ஆதங்கப்படுகிறார் பொன்னையா. ‘இன்று என்னுடைய முயற்சியின் விளைவாக டிவிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனத்திற்காகவாவது லைசன்ஸ் கொடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டதே ஆறுதலாக இருக்கிறது‘ என்கிற பொன்னையா ஒரு வழக்கறிஞரும் கூட .

இராபர்ட் சந்திரகுமார்

இன்னொரு சம்பவம்..

இதே போல மாற்றுத் திறனாளியான பால்ராஜ் என்பவர் தனது காருக்கு பதிவுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் தர மறுத்துள்ளார்கள். இவரது காரும் கேரளாவில் கொடுத்து சிறு மாற்றம் செய்து கொண்டு வரப்பட்டது. ’வண்டியை உங்கள் இஷ்டத்திற்கு மாற்றினால் பதிவுச் சான்றிதழ் தர முடியாது’ என்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கூற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுகிறது. இந்த வழக்கில் லஜபதிராய் ஆஜராகினார். நீதிமன்றம் ’ஒரு மாதத்திற்குள் பதிவுச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அத்துடன் மாற்றுத்திறனாளிகள் வாரியத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விண்ணப்பித்ததும் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் போன்றவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் வழிவகை செய்ய அறிவுறுத்தியிருக்கிறது.

பாக்ஸ்
·மாற்றுத்திறனாளிகள் ரயிலில் நான்கில் ஒருமடங்கு கட்டணம் செலுத்தி இந்தியா முழுவதும் பயணிக்கலாம். உடன் அழைத்துச் செல்லப்படும் ஒரு நபருக்கும் இதே சலுகை உண்டு. இதே போல பேருந்திலும் சலுகை உண்டு.

·மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு அரசின் திருமண நிதியுதவித் திட்டத்திலிருந்து 25,000ரூபாயும், 4கிராம் தங்கமும், பட்டதாரிகளுக்கு 50,000ரூபாயும், 4கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

·10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாற்றுத் திறனாளி மாணவ,மாணவியருக்கு ரொக்கப்பரிசு மற்றும் உயர்கல்வித் தொடர உதவித்தொகை வழங்குதல். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்குத் தனி கட்டணம் (Special Fees ) செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்.

·மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய உதவும் வகையில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெட்டிக்கடை வைக்க மானியம் உண்டு.

·தசைச் சிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க அரசின் உதவித் தொகை உண்டு.


நன்றி: புதிய தலைமுறை,  ஜூன், 28,  2012, (பக்கம் 34 -35)
இவள் பாரதி

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?